Sunday 1 June 2014

கனவுலகவாசி (பகுதி 4)


*கனவுலகவாசி (பகுதி 4)

#சிவசங்கர்

வேகமாய் ஓடி வந்த
தேவதை என்னைத்
தழுவியணைத்துக்
கொண்டாள்!!

என்னாயிற்று?

நான் துரத்தப்படுகிறேன்!

யாரால்?

உன் துயரங்களால்!!

என் துயரங்களா?

ஆமாம்!

இல்லை..
எனக்கு எந்தத்துயரமும் இல்லையே!

ஆங்!! இதுவல்ல பதில்,
துயரமில்லமலா கனவு வரும்..
கனவில்லாமலா நான் வருகிறேன்!!

அந்தக் கனவிலும் என்னை
யோசிக்க வைத்தாள்!

இப்போது நான் என்ன செய்ய?
அவளிடம் வினவினேன்!

நீ ஒன்றும் செய்ய வேண்டாம்!
அதற்காகவே நான் உன்னைத்
தழுவிக்கொண்டேன்!
நான் உன் துன்பங்களை
பங்கிட்டுக்க்கொள்பவள்!!
சில சமயம் இன்பங்களை!

அப்படியானால்,
என் துயரங்கள்
நீங்கும் பொருட்டு
நான் உன்னைக் காண
இயலாதே!

என்னைக் காண நீ
இத்தனை அடம் பிடிப்பது
வேண்டாதது..

நான் வான வேடிக்கை!
நொடிப்பொழுதில்
ஜாலம் காட்டி
இமைப்பதற்குள்
மறைந்து விடுவேன்!

நான் நட்சத்திரங்களைப்
போன்றவள்!
நீ காணும் தொலைவில்
இருப்பேனாயினும்
பறித்திடும் தொலைவில்
எப்போதும் இருந்திடமாட்டேன்!

அப்படியானால் நீ யார்?

நான் தான் கனவு!
கனவு தான் என் நிஜம்!
நான் கனவில் தோன்றும் நிஜம்!
நான் நிஜத்தில் தோன்றும் கனவு!
புரியவில்லை!

என்னை முழுமையாய்ப்
புரிந்தவர்கள் சிலரே!

அதிலும் முக்கியமாய்க்
குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர்
ஒருவரே!

யாரது! மன்னிக்கவும்!
யாரவர்?

அவர்தாம் "சிக்மண்ட் பிராய்டு"!
சரி போகட்டும்...
நீயும் என்னை விரைவில்
புரிந்துகொள்வாய்!
நீ புரிந்துகொள்ளும் வரை
நான் உன்னுடனே
லயித்திருப்பேன்!
கனவில் மட்டும்!

அதன் பிறகு?
என்னை விட்டு
அகன்றுவிடுவாயா?

இல்லை எப்போதும்
உன்னுடன் நான் பிரவேசிப்பேன்!
நான் தற்காலிகமாக
உனக்குள் நிரம்பியிருக்கும்
நிரந்தரமானக் கனவு !!!

நீ ஆண்பால் என்பதால்
என்னைப் பெண்ணாகவும்,

மனிதன் என்பதால்
என்னைத் தேவதையாகவும்
ஏற்றுக்கொண்டுவிட்டாய்!
உனது மொழியில் சொன்னால்
நான் உன கனவு தேவதை!

- கனவுலகில் பயணிப்போம்!

கனவுலகவாசி (பகுதி 3)


*கனவுலகவாசி (பகுதி 3)

#சிவசங்கர்

மெல்லக் 
கவர்கிறது
இரவுகளின் 

மெத்தனப்போக்கு!



ஓர் அசந்யம் 

சிந்தையினை

ஆட்டுவிக்கத் 

தொடங்கியது!


உறங்கச்செல்லும்
முயற்சிக்குள் 
இறங்கினேன்!


இன்றைய கனவிலும்
நான் திட்டமிட்டபடியே
அந்த, தேவதையிடம் 
செல்லப்போகிறேன் !!!

உனக்காகக் 
காத்திருப்பேன் என
நேற்றையக் கனவின் 
இறுதியில்
முத்தத்துடன் 
சொல்லி முடித்தாள் !!

ஆம், 
வழக்கம் போலவே 
நீள்வட்டப்பாதையின் 
நீண்டு கிடக்கும்
மதில்மேல் அமர்ந்துதான்
பேசப் போகிறோம் !!!

ஒரு முறை, 
அம்மாடியோ !!!

ஓரக்கண்களால் 
சற்றே கீழ்நோக்கினேன்,
இதயம் 
திக்கு முக்காடியது !!!!

கிராமத்துக் காரியா என்ன?
சும்மாடு கட்டி,
கருப்பட்டியும் கஞ்சியும்
கொண்டுவருவதற்கு !!!

ஆசையுடன் கேட்டதால்,
அண்டத் தோட்டத்தில்
எட்டி எட்டிப் பறித்த
சில விண்மீன் பழங்களை
கொத்தாய்ப்பிடித்து,
பச்சையாக சுவைக்க எடுத்து
வருவாள் இன்று !!

- - கனவுலகில் பயணிப்போம்.

Saturday 31 May 2014

கனவுலகவாசி (பகுதி 2)




*கனவுலகவாசி (பகுதி 2)

#சிவசங்கர்


நடக்கத் தொடங்கியவன்
மிதக்கத் தொடங்கினேன்!

நிலவிற்குச் சற்றே
அருகாமையில் சென்றதன்
கதகதப்பினை 
என் உதடுகளின் உளறல்கள் 
வேகமாய் வெளிக்கொணரின!

பெண்ணே! ஒரு கேள்வி!
கனவுலகில் சுற்றிப்பார்க்கும்
அளவுக்கு என்ன இருக்கிறது!

இங்கு எதுவும் புதிதல்லதான்!
ஆனால் கனவானது நனவின் 
மற்றொருப் பரிமாணம்!
இரண்டிற்கும் இடையில்
ஆக்கிரமித்திருக்கும்
தொங்கும் பாலம்தான்
விழிகளின் உறக்கம்!

இருக்கட்டும்!
இருப்பினும் நனவுலகில்
நான் ஆளாக்கப்பட்ட
துயரங்களுக்கும்,
நேர்ந்த துரோகங்களுக்கும்,
கைதேர்ந்தோரின் வஞ்சகச்
சொற்களுக்கும்
மாற்று மருந்தாகவா
அமைந்துவிடப்போகிறது
இந்தக் கனவு!

அப்படியில்லை!
வாழ்வின் நெருடலானப்
படலங்களை மட்டுமே
அனுபவித்தவன்,
அதிலிருந்து மீள
மதுவிடம் செல்கிறானே!
அதை விட
இது சிறந்ததொரு மருந்தாகவே 
அமையலாம்!
இங்கு எதுவும் கிடைக்கும்!!!
நீ விரும்பும் பட்சத்தில்!!!

அப்படியா?
எதுவும் கிடைக்குமா!
என் பழையக் காதலி!
அவளை நான் மிகவும் விரும்புகிறேன்!
அவளிடம் மீண்டும் சில வினாடிகள்
பேசத்துடிக்கிறேன்!!!
அவளுக்குத் தெரியாமலே!!
சாத்தியமா??

முடியும், திறமான நிச்சயம்!!!
இப்போது 
அவள்தான் நான்!

சொல்லியச் சுருக்கில்
அணைத்துக்கொண்டாள்!

அல்லி இதழ்களுக்குள்
இறங்கத் தொடங்கினேன்!!!

- கனவுலகில் பயணிப்போம்.

கனவுலகவாசி (பகுதி1)


*கனவுலகவாசி (பகுதி 1)

#சிவசங்கர்

வான வளாகத்தில்,
இரவுகள் மீட்டும்
யாழிசையில்,
மேகத்தின் மோகத்தில்
தள்ளாடியபடி,
ஒரு நடன தர்பாரில்
ஆடிக்கொண்டிருக்கும்,
ஆயிரங்கோடி
விண்மீன் காதலர்கள்!!!!!

நடுவே, நிலவெனும்
நவநாகரீக மன்னர்!!!!!

அழகின் ஒட்டு மொத்த 
உருக்கலாக நிலவு!

அதன் வெளிச்சத்தில்
கண்கொட்ட
விழித்திருந்த அந்த இரவில்,
உறங்கத் தொடங்கினேன்!

ஏதோ ஒரு அசந்யம்
தலையைக் கோத,
விழித்தெழுந்தேன்!!

பால்வழி அண்டத்தின்
இடையில்,
ஈர்ப்பு விசைகளின்றி
பறந்து கொண்டிருந்தேன்!!!
உறங்கப்போகும் முன்
இருந்த உடல் வலி
இப்போதில்லை!!!!

யாரோ ஒரு அழகி
என்னை நெருங்குகிறாள்!!
கொஞ்சம் நில்
யார் நீ??
நான் எங்கிருக்கிறேன்??

கனவுலகம் உங்களை
வரவேற்கிறது!
நீ கனவில் இருக்கிறாய்!!

அட,
கனவில் வரவேற்பாளர்கள்
கூட உண்டா??

இது உன் கனவுலகம்,
இங்கு நீ எதை வேண்டுமானாலும்
உருவாக்கிக்கொள்ளலாம்!!!

ஆனால்
சுவாரஸ்யம் வேண்டுமெனில்
கனவினை அதன் போக்கில்
விடுதல் அவசியம்!!!!

அப்போதுதான்
அதன் இயல்பான வண்ணம்
புலப்படும்!!

மனிதனின் அதிகாரத்திற்குக்
கட்டுப்படாத இரண்டே விடயங்கள்
கனவும் தூக்கமும்தான்!!!

சரி வா!!
கனவுலகைச் சுற்றிப்பார்க்கலாம்!

- கனவுலகில் பயணிப்போம்...