*கனவுலகவாசி (பகுதி 4)
#சிவசங்கர்
வேகமாய் ஓடி வந்த
தேவதை என்னைத்
தழுவியணைத்துக்
கொண்டாள்!!
என்னாயிற்று?
நான் துரத்தப்படுகிறேன்!
யாரால்?
உன் துயரங்களால்!!
என் துயரங்களா?
ஆமாம்!
இல்லை..
எனக்கு எந்தத்துயரமும் இல்லையே!
ஆங்!! இதுவல்ல பதில்,
துயரமில்லமலா கனவு வரும்..
கனவில்லாமலா நான் வருகிறேன்!!
அந்தக் கனவிலும் என்னை
யோசிக்க வைத்தாள்!
இப்போது நான் என்ன செய்ய?
அவளிடம் வினவினேன்!
நீ ஒன்றும் செய்ய வேண்டாம்!
அதற்காகவே நான் உன்னைத்
தழுவிக்கொண்டேன்!
நான் உன் துன்பங்களை
பங்கிட்டுக்க்கொள்பவள்!!
சில சமயம் இன்பங்களை!
அப்படியானால்,
என் துயரங்கள்
நீங்கும் பொருட்டு
நான் உன்னைக் காண
இயலாதே!
என்னைக் காண நீ
இத்தனை அடம் பிடிப்பது
வேண்டாதது..
நான் வான வேடிக்கை!
நொடிப்பொழுதில்
ஜாலம் காட்டி
இமைப்பதற்குள்
மறைந்து விடுவேன்!
நான் நட்சத்திரங்களைப்
போன்றவள்!
நீ காணும் தொலைவில்
இருப்பேனாயினும்
பறித்திடும் தொலைவில்
எப்போதும் இருந்திடமாட்டேன்!
அப்படியானால் நீ யார்?
நான் தான் கனவு!
கனவு தான் என் நிஜம்!
நான் கனவில் தோன்றும் நிஜம்!
நான் நிஜத்தில் தோன்றும் கனவு!
புரியவில்லை!
என்னை முழுமையாய்ப்
புரிந்தவர்கள் சிலரே!
அதிலும் முக்கியமாய்க்
குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர்
ஒருவரே!
யாரது! மன்னிக்கவும்!
யாரவர்?
அவர்தாம் "சிக்மண்ட் பிராய்டு"!
சரி போகட்டும்...
நீயும் என்னை விரைவில்
புரிந்துகொள்வாய்!
நீ புரிந்துகொள்ளும் வரை
நான் உன்னுடனே
லயித்திருப்பேன்!
கனவில் மட்டும்!
அதன் பிறகு?
என்னை விட்டு
அகன்றுவிடுவாயா?
இல்லை எப்போதும்
உன்னுடன் நான் பிரவேசிப்பேன்!
நான் தற்காலிகமாக
உனக்குள் நிரம்பியிருக்கும்
நிரந்தரமானக் கனவு !!!
நீ ஆண்பால் என்பதால்
என்னைப் பெண்ணாகவும்,
மனிதன் என்பதால்
என்னைத் தேவதையாகவும்
ஏற்றுக்கொண்டுவிட்டாய்!
உனது மொழியில் சொன்னால்
நான் உன கனவு தேவதை!
- கனவுலகில் பயணிப்போம்!
No comments:
Post a Comment