Sunday 1 November 2015

*கனவுலகவாசி (பகுதி 7)


*கனவுலகவாசி (பகுதி 7)

#சிவசங்கர்

அன்றொரு இரவு

கனவுகளுக்கு 
அடிமையாகிவிட்டது போல
ஒரு உள்ளுணர்வு!!!

ஆனாலும் என்னை
மீட்டெடுத்துக்கொள்ளும்
எண்ணமில்லை!!!

இப்போது என்னப்
பிரச்சனை!!

அதீத வேலைகளால்
தூங்க முடியவில்லை!!

அலுவலக வேலைகளை
வெகு சீக்கிரமாய்
முடித்துவிட்டுக் காதலியைக்
காணச்செல்லும் வாலிபனாய்
கனவிற்கு ஏங்கினேன்!!!

அதற்காக 
நனவுலகக் காதலியிடம்
சீக்கிரம் காதல்மொழியைப் பேசி
முடித்துக்கொண்டுவிட்டுக்
கிளம்பினேன்!!!


குருவிடம் சென்றால்,
அரும்பெரும் பழங்களும்
அருகம்பூ மலர்களும் 
எடுத்துச்செல்லலாம்!

காதலியைக் 
காணச்சென்றால்
ஒற்றை ரோஜாவினை
எடுத்துச்செல்லலாம்!


எதிரியினைக்
காணச்சென்றால்
தற்காப்பிற்காக
ஆயுதமொன்றை
எடுத்துச்செல்லலாம்!


விண்ணிற்குச் சென்றால்,
காற்றடைத்தப் பைகளைக்
கொண்டு செல்லலாம்!!!!

கனவிற்குச் செல்லும்போது
என்ன எடுத்துச் செல்வது?


‘உடம்பு என்பதே 
கனவுகள் வாங்கும் பைதானே’
வைரமுத்துவின் வைரவரிகள் 
நினைவுக்கு வருகிறது!!!

கனவுகளில்
சில கனவுகள்
முடிந்த பிறகும்
நினைவில் இருக்கும்!!!!

சில கனவுகள்
நினைவில் இருப்பதைக்
கனவில் காட்டுவன!!!


இன்றையக் கனவு
எந்த ரகமாய் இருக்கும்
என்ற குழப்பத்தோடு
உடல் முழுவதையும்
உறக்கக் கடலில்
கட்டுமரம் போல் இறக்கி
கனவிற்குக் கண்களால்
வலைவீசினேன்!


- கனவுலகில் பயணிப்போம்.

No comments:

Post a Comment